

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் படும் சாதி மற்றும் இருப்பிடச் சான்று களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
5 அல்லது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 நாட்களில் சாதி மற்றும் இருப்பிடச் சான்றுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எஸ்.சி. மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது. மேலும் சாதி மற்றும் இருப்பிடச் சான்று கோரி விண்ணப்பிக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலைய விடுவதாகவும் பொதுமக்கள் அவ்வப்போது புகார் கூறி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், சாதி மற்றும் இருப்பிடச் சான்று வழங்குவது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எப்ஏக்யூ) பகுதியில், “சாதி மற்றும் இருப்பிடச் சான்றுகளுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் எண் வழங்கி வருகிறது. இது அடையாள மற்றும் முகவரி சான்றாக நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.