தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்: அச்சத்தில் எல்லையோர கிராம மக்கள்

தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்: அச்சத்தில் எல்லையோர கிராம மக்கள்
Updated on
1 min read

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா, சம்பா, அர்னியா, ராம்கர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கையெறி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பா மாவட்டத்தில் உள்ள சச்தேகர் கிராமத்தினர், ஊரை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு எல்லை கிராமமான பர்கவால் கிராமத்தில், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை 200 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த 2012- ஆம் ஆண்டு 117 ஆக இருந்தது.

பாகிஸ்தான் தாக்குதல் குறித்து எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்: எல்லையில் நேற்று இரவு 8.30 மணியளவில் பாக். படையினர், இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்த துவங்கினர். எல்லையில் நிலவும் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in