முக்கியமான 4 திருத்தங்களுடன் மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நாளை தாக்கல்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வாய்ப்பு

முக்கியமான 4 திருத்தங்களுடன் மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நாளை தாக்கல்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வாய்ப்பு
Updated on
1 min read

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா 4 முக்கிய திருத்தங்களுடன் மாநிலங்களவை யில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இப்போது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விற்பனை வரி வசூலிக்கின்றன. இதற்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஜிஎஸ்டி என்ற பெயரில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான (ஜிஎஸ்டி) மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்டது.

எனினும், மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு போதுமான பெரும்பான்மை பலம் இல்லாத தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரண மாகவும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்டி மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தியது.

இதன் அடிப்படையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த மசோதாவில் 4 முக்கிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது.

குறிப்பாக, மாநிலங்களுக்கிடை யிலான விற்பனையின்போது கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும். ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை முதல் 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்வதாக உறுதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகள் ஏற்கப் பட்டுள்ளன.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங் களவையில் ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் இத்தகைய திருத்தங்களுடன் கூடிய மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் நேற்று கூறும் போது, “ஜிஎஸ்டி மசோதா மாநிலங் களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்படும். இதன்மீது அன்றைய தினமே விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும். அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, ஜிஎஸ்டி மசோதாவை இன்று தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தங்கள் கட்சித் தலைவர் சோனியா உ.பி.யில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதால் புதன்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்த னர். இதை அரசு ஏற்றுக்கொண்டது.

பாஜக கொறடா உத்தரவு

ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு மாநிலங்களவை பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அவைக்கு வர வேண்டும் என்று நேற்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in