

உத்தரப் பிரதேசம், நொய்டாவை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த ஆகஸ்டில் ஷாஜஹான்பூருக்கு காரில் சென்றனர். அப்போது கான் பூர் நெடுஞ்சாலையில் புலந்த்சாஹர் என்ற இடத்தில் கொள்ளை கும்பல் அவர்களது காரை வழிமறித்தது. காரில் இருந்த 2 ஆண்களை கட்டிப்போட்டுவிட்டு தாயையும் (35) அவரது மகளையும் அந்த கும்பல் பலாத்காரம் செய்தது.
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டது. அதன்பேரில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதுதொடர்பாக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தடையுத்தரவால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது, குற்றப்பத்திரிகையும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் ஆகியோர் தடையை நீக்கி சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தனர். மேலும் வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்றுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.