

கன்னட கூட்டமைப்புகளின் சார்பாக கர்நாடகாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து, நேற்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஏராளமானோர் பெங்களூரு சுதந்திர பூங்காவில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அம்பேத்கர் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், சித்தராமையாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், நீதிபதிகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். சட்டப்பேரவை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற கன்னட அமைப்பினரை போலீஸார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கன்னட அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். வாட்டாள் நாகராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வாட்டாள் நாகராஜ் கூறும் போது,'' கர்நாடகாவுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி நீரை எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு விட முடியாது. தமிழகத்துக்கு செல்லும் காவிரி நீரை நிறுத்தும் வரை போராட்டம் நடத்துவோம். தமிழ்நாட்டில் கன்னடர்கள் தாக்கப்பட்டால், கர்நாடகாவில் தமிழர்களும் தாக்கப்படுவார்கள். கன்னடர்கள் ரத்தம் சிந்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. கன்னட அமைப்புகளின் கூட் டமைப்பு சார்பாக செவ்வாய்க் கிழமை மீண்டும் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்து வோம். எங்களுக்கு 700-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மைசூரு, மண்டியாவில் விவசாய அமைப்புகளும் ஆதரவாக உள்ளன. எங்கள் எதிர்ப்பை உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிப்போம்''என்றார்.