

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சிறார் உரிமைகள் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பெண் கல்வி உரிமையை வலியுறுத்திப் போராடிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கைலாஷ் வித்யார்த்திக்கு எனது மனம் திறந்த வாழ்த்துக்கள். இந்த சாதனை குறித்து நாடு முழுதும் பெருமையடைகிறது.
கைலாஷ் சத்யார்த்தி மனித குலம் முழுதிற்குமான ஒரு காரணத்திற்காக தனது வாழ்க்கையை அரப்பணித்துக் கொண்டுள்ளார். இந்த உறுதியான முயற்சிகளை நான் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் உரிமைப் போராளி மலாலா யூசுப்சாய் பற்றி குறிப்பிடும்போது“இவரது வாழ்க்கை கடுமையான தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட பயணம்” என்று பதிவிட்டுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதையடுத்து கைலாஷ் சத்யார்த்தி தனது ட்விட்டர் பதிவில் “தேநீர் விற்கும் சிறுவனாகத் தொடங்கி தற்போது பிரதமராகியுள்ளார். இனி ஒரு குழந்தை கூட குழந்தைத் தொழிலாளியாகக் கூடாது என்பதை இவர் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துச் செய்தியில், “குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சமூக பிரச்சினையில் உயிர்ப்புள்ள இந்திய சிவில் சமூகத்தின் பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த நோபல் பரிசைப் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.