

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியர்களான டி.அனந்தகிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் ஆகிய இருவரையும் கைது செய்ய டெல்லி 2ஜி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய அனந்த கிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் இருவரும் மலேசியாவில் வசித்து வருகின்றனர். இவ்வழக்கில் நேரில் ஆஜராகும்படி இவர்கள் இருவருக்கும் பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியன்று சிபிஐ தாக்கல் செய்த மனுவில், "டி.அனந்தகிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் ஆகிய இருவருக்கும் அனுப்பப்பட்ட சம்மன் அவர்களுக்கு கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானவை. அவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாட வேண்டியிருக்கிறது. எனவே அதற்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு பிறப்பித்தால் மட்டுமே அனந்தகிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ப் மார்ஷலை கைது செய்ய முடியும்" எனத் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இருவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அன்றைய தினம், இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.