

ஜம்மு - காஷ்மீரில் நாளிதழ்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசிடம் அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி விளக்கம் அளித்துள்ளார்.
காஷ்மீரில் புர்ஹான் வானி என்கவுன்டருக்குப் பிறகு கடுமையான வன்முறைகள் வெடித்தன. கலவரங்கள் தொடர்ந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் செய்தி ஊடகங்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளிதழ்கள் வெளியாவதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், காஷ்மீரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளிதழ்களை வெளியிட தடையேதும் விதிக்கப்படவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு நேற்று இரவு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தியிடம் தொலைபேசியில் இது தொடர்பாக விளக்கம் கேட்டார்.
அப்போது, 'காஷ்மீரில் நாளிதழ்கள் வெளியாக தடை எதுவும் விதிக்கப்படவில்லை' என்று மத்திய அமைச்சரிடம் அவர் எடுத்துரைத்துள்ளார்.
முன்னதாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, கடந்த மூன்று நாட்களாக உள்ளூர் செய்தித்தாள்கள் எதுவும் காஷ்மீரின் நிலையை எடுத்துக் கூறவில்லை என்றும், உருது, காஷ்மீரி, ஆங்கில மொழி உள்ளூர்ச் செய்தித்தாள்கள் எதுவும் அங்கே கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது.
ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ராங்க்ரெத் தொழிற்பேட்டையில் இருந்து காவல்துறையினர், அச்சடிக்கப்பட்ட நாளிதழ்களைக் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின. அத்துடன், இரண்டு அச்சகங்களை மூடியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் ஆலோசகர் அமிதாப் மட்டூ, ''முதல்வரின் ஒப்புதலின் பேரில் நாளிதழ்கள் எதுவும் தடை செய்யப்படவில்லை. அவற்றைச் செய்த கீழ்மட்ட அதிகாரிகளால் மேல்மட்ட அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.