

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்கூட சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திதான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.
இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவு வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற தகவல் இல்லை. அவர் நாடு திரும்பும் வரை அவரது பணிகளை ராகுல் கவனிப்பார் எனத் தெரிகிறது.