

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை (அக்.17) விசாரணை நடத்துகிறது.
இந்த ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சிறையில் இருந்து வருகிறார். தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கேட்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், '66 வயதாகும் மூத்த குடிமகளான எனக்கு மருத்துவரீதியான பிரச்சினைகள் உள்ளன.
சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு கிடைக்க குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும். எனவே, இடைக்காலத்தில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பான கோரிக்கை இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு முன்வைக்கப்பட்டது.
"தண்டனைக்கு இடைக்கால தடை கோரும் அவசர மனு இது" என்று ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நரிமன் கோரிக்கை விடுத்தார்.
சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான தண்டனைக்கு இடைக்கால தடை கோரும் மனு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராக, மனுக்கள் மீது நீதிபதிகள் குழு சிறிது நேரம் ஆலோசனை செய்ய, தலைமை நீதிபதி தத்து அக்டோபர் 17-ஆம் தேதிக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்தார்.
ஜாமீன் மற்றும் தண்டனைக்கு இடைகால தடை கோரும் மனுவின் அடிப்படை:
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை கோரும் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவதும், தண்டனைக்கு இடைக்கால தடை கோருவதும் இயல்பாகவே தொடரும் நடைமுறைகளாகும். இல்லையெனில் இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது என்று பொருள். இதுதான் ஜாமீன் மற்றும் தண்டனை ரத்து கோரிக்கையின் அடிப்படை சாராம்சம் ஆகும்.
மேலும், அவருக்கு சாதாரண சிறைத் தண்டனையே அளிக்கப்பட்டுள்ளது, கடுங்காவல் தண்டனை அளிக்கப்படவில்லை. இது போன்ற தருணங்களில் ஜாமீன் வழங்குவது நடைமுறை. ஜாமீன் கொடுப்பது விதிமுறை, மேலும் விதிவிலக்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகளில் மட்டுமே ஜாமீன் நிராகரிக்கப்பட முடியும். இந்த வழக்கில் அத்தகைய விதிவிலக்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் இல்லை.
இந்த வாதங்கள் ஜெயலலிதா ஜாமீன் மற்றும் தண்டனையை இடைக்கால ரத்து செய்யக்கோரும் மனுவில் வைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகரா தனது தீர்ப்பில், ஊழல் என்பது மனித உரிமை மீறல் என்று கூறியிருந்தார். இதற்கு ஆதரமாக அவர், 2012ஆம் ஆண்டு சிபிஐ - பாலகிருஷ்ணா தத்தாத்ரியா கும்பார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது, ஜெயலலிதா சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தின் 2012-ஆம் ஆண்டு தீர்ப்பில் கூறப்பட்டது, தண்டனை அளிப்பதற்கே தடை கோரிய வழக்காகும், ஆனால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரத்தில் தண்டனைக்கு இடைக்கால தடை மட்டுமே கோரப்பட்டுள்ளது என்று வாதாட வாய்ப்புள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.