

பிரதமர் நரேந்திர மோடி விருப்பத்துக்கு மாறாக உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த ஜனவரி 7-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான இந்த ஆலோசனை யில் பிரதமர் மோடி உரையாற்றி னார். இதில், தலைவர்கள் தங்கள் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க வேண்டாம் எனவும், வேட்பாளர் களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கட்சியிடமே விட்டுவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இதுவரை 304 வேட்பாளர்கள் கொண்ட 2 பட்டியலை பாஜக வெளியிட்டுள் ளது. இதில் பாஜக தலைவர்களின் வாரிசுகள், உறவினர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெளியான 155 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் 8-க்கும் மேற்பட்ட வாரிசுகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் மகன் பங்கஜ்சிங் நொய்டாவில் போட்டியிட உள்ளார். உ.பி. பாஜக பொதுச் செயலாளரான இவர் கடந்த இரு தேர்தல்களாக வாய்ப்பு கேட்டு வந்தார். பாஜக மூத்த தலைவர் லால்ஜி தண்டனின் மகன் அசுதோஷுக்கு லக்னோ கிழக்கு தொகுதியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதுபோல் மக்களவை பாஜக எம்.பி.க்கள் ஹுக்கும்சிங், பிரிஜ்பூஷண் சரண்சிங், சர்வேஷ்குமார் ஆகியோரின் வாரிசுளுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு விலகி பாஜக வில் இணைந்த சுவாமி பிரசாத் மவுர்யா தனது 25 ஆதரவாளர் களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் இருந்தார். இந் நிலையில் அவரது மகன் உத்கர்ஷ் மவுரியாவுக்கும் பாஜக மூத்த தலைவர் பரம்தத் துவேதியின் மகன் சுனில்தத் துவேதிக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி. பாஜகவின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு பகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ளது. இதை கட்சியின் வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மற்ற கட்சிகளை போல் வாரிசுகள் என்ற ஒரே காரணத்துக்காக நாங்கள் வாய்ப்பு தரவில்லை. கட்சியின் தேர்வுக்குழுதான் வேட்பாளர்களை தேர்வு செய்தது. தலைவர்கள் வற்புறுத்தலால் யாரும் தேர்வு செய்யப்பட வில்லை” என்று தெரிவித்தனர்.
பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. 149 பேர் கொண்ட இந்தப் பட்டியலிலும் வாரிசுகள் இடம்பெற்றிருந்தனர். இதில் உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்கின் பேரன் சந்தீப்சிங் பெயரும் வெளியாகி இருந்தது. சந்தீப்பின் தந்தையான ராஜ்வீர் பாஜக எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் ராஜ்வீரின் 2வது மகன் சஞ்சூசிங், மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவின் மகன் அமித் மிஸ்ரா உட்பட வாரிசுகள் பலருக்கு அடுத்தப் பட்டியல்களில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது தவிர மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த மூத்த தலைவர்கள் சிலரும் தங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்டு வருகின்றனர். காங்கிரஸில் இருந்து வந்த ரீட்டா பகுகுணா ஜோஷி, பகுஜன் சமாஜில் இருந்து வந்த பிரஜேஷ் பாதக் உள்ளிட்டோர் இவ்வாறு வாய்ப்பு கேட்கின்றனர்.