

எதிர்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை இன்று (செவ்வாய் கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக இன்று காலை அவை கூடியவுடன் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஜேபிசி அறிக்கை, தெலங்கானா விவகாரம், விலைவாசி உயர்வு, ஆகிய பிரச்சினைகளை எழுப்பி எதிர் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், 12 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போதும் அமளி நீடித்தத்து. கடும் அமளிக்கு மத்தியிலும் அலுவல்களை நடத்த சபாநாயகர் முயற்சித்தார். ஆனால், கூச்சலும், குழப்பமும் அதிகரித்ததைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் அலுவல் நாளான நேற்று (திங்கள்கிழமை) இரு அவைகளிலும் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 5-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அடுத்த நாளில் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் நேற்று கூடிய நாடாளுமன்றம் அமளி காரணமாக முடங்கியது. தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாகவும் மக்களவை முடங்கியுள்ளது.