

நவீன இந்தியாவில் பாலின பாகுபாட்டுக்கு இடம் இல்லை என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் சாதனையாளர் களுக்கு விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் விருதுகளை வழங்கிய பின்னர் பிரணாப் முகர்ஜி பேசிய தாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து அரசு கவலை அடைந்துள்ளது. நம் நாட்டில் வசிக்கும் பெண்கள், தாங்கள் பாதுகாப்பாக இருக்கி றோம் என்று உணர முடியாத சூழல் நிலவுகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் நமது அரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. நவீன இந்தியாவை நோக்கி பயணிக்கும் இதுபோன்ற சூழ்நிலையில் பாலின பாகுபாட்டுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள், கதகளி பெண் நடனக்கலைஞர்கள் (முதல் முறை), நாட்டின் முதல் பெண் கிராபிக் நாவலாசிரியர், அமில வீச்சில் உயிர் தப்பியவர்கள், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் உட்பட மொத்தம் 31 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களில் சுப வாரியார், பி.கோடனன்யகுய் மற்றும் அனத்தா சன்னி ஆகிய மூவரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவர். இவர்கள் சந்திரயான், மங்கள்யான் மற்றும் சமீபத்தில் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்திய ராக்கெட் ஆகிய திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளனர்.
ஐஐஎஸ்சி-க்கு பாராட்டு
உலகின் 10 சிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சிறிய பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதல்முறையாக இந்தியாவின் இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் (ஐஐஎஸ்சி-பெங்களூரு) 8-ம் இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் அனுராக் குமாருக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பிய வாழ்த்து செய்தியில், “சர்வ தேச அளவில் 10 சிறந்த பல்கலைக்கழங்கள் பட்டியலில் இந்திய நிறுவனம் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். இது இன்று சாத்தியமாகி உள்ளது. இதற்காக ஐஐஎஸ்சி ஆசிரியர்கள், மாணவர் கள், ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.