

கேரள மாநிலத்தின் காசர்கோட் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு காணாமல் போன 13 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
13 பேரும் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டதாக அவர்கள் உறவினர்களே தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களிடம் இருந்து அவர்களிடம் இருந்து அண்மையில் கிடைக்கப்பெற்ற குறுந்தகவலில், "எங்கள் இறுதி இலக்கை அடைந்துவிட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறினர். அவர்கள் 13 பேரும் துபாய் வாயிலாகவோ அல்லது இலங்கை வாயிலாகவோ ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
13 பேர் விவரம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம், "அந்த 13 பேரில் எனது உறவினர் ஹசீசுதீனும் (23) ஒருவர். மொத்தம் 9 ஆண்கள், 4 பெண்கள், ஒரு குழந்தை, ஒரு கைக்குழந்தை அந்தக் குழுவில் இருந்தனர். அவர்களில் மூன்று பெண்கள் கர்ப்பமாக உள்ளனர். ஒருவர் அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தின் மேலாளர். அவரும் அவரது மனைவியும் அண்மையில்தான் இஸ்லாம் மதத்துக்கு மாறினர்" என்றார்.
இந்நிலையில் 13 பேர் மாயமானது, அவர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக கூறப்படுவது உள்ளிட்ட தகவல்களில் நம்பகத்தன்மையை மத்திய, மாநில உளவு அமைப்புகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பாக காசர்கோடு சிபிஐ எம்.பி. பி.கருணாகரன், திரிகாரிப்பூர் எம்.எல்.ஏ. ராஜகோபால், காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வி.பி.பி.முஸ்தபா ஆகியோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திதுப் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து கருணாகரன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் பிரச்சினைக்குரியது. இது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் இவ்விவகாரத்தை எடுத்துச் சென்றுள்ளேன். காசர்கோடு சம்பவம் போல் பாலக்காட்டிலும் தம்பதி காணவில்லை" என்றார்.
உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "காசர்கோடு மாவட்டத்தில் 13 பேரை காணவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவலே. ஆனால், அவர்கள் ஐ.எஸ். தொடர்புடையவர்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
கேரளாவில் ஐ.எஸ். கொள்கையின்பால் ஈர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை பெருகிவருகிறது என்றாலும் காணாமல் போனவர்கள் அனைவரும் ஐ.எஸ். இயக்கத்தில்தான் சேர்ந்துவிடுகிறார்கள் என்ற முடிவுக்கு வர முடியாது. இங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக சென்ற சில இளைஞர்களையும் காணவில்லை என புகார் வந்துள்ளது" என்றார்.