

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்ப்போம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக பாஜகவின் கட்சி மேலிடப் பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடியை டெல்லியில் தமிழிசை நேற்று சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் வரவிருக்கும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை. தற்போது எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம். மத்திய அரசு மீது தேமுதிக மற்றும் பாமக தலைவர்கள் வைக்கும் விமர்சனங்கள் அவர்களின் தனிப்பட்டக் கருத்தாகும். இதைவைத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்துவிட்டதாக கருதக்கூடாது.
கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக மாநில நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் நவம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை தேசிய அளவில் 3 இடங்களில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்காக பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் நானும் பிற நிர்வாகிகளும் பங்கேற்கிறோம்.
தமிழகத்தில் பாரதிய ஜனதாவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்ப்போம். தமிழகத்தில் மக்கள் விரும்பும் மாற்றத்தை அளிக்கும் வகையில், 2016-ல் பாஜக கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும்.
தமிழகத்தில் பால் கொள் முதலில் பல்வேறு ஊழல் நடை பெறுகின்றன. இதன் மீது விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த ஊழலை பொதுமக்கள் மீது சுமையாக்குகிறது அதிமுக.
தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வரும் 31-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை 20 நாட்களுக்கு முன்பே கட்சித் தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பிவிட்டேன். மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டமன்ற தேர்தல் காரணமாக இதற்கான அனுமதி தள்ளிப்போயுள்ளது. கட்சியின் தமிழக பொதுக்குழு கூட்டம் நவம்பர் முதல் வாரத்தில் நடை பெறவுள்ளது. இதற்கான தேதி அறிவித்த பின் சென்னை வருவ தாக ரூடி கூறியுள்ளார்” என்றார்.
ரஜினி குறித்த கேள்விக்கு, “பாஜகவில் ரஜினி இணைந்தால் வரவேற்போம். அரசியலில் அவருக்கு தெளிவான பார்வை இருக்கிறது. அதேநேரம் ரஜினியையோ அல்லது வேறு எந்த நடிகரையோ நம்பி பாஜக இல்லை” என்றார்.