

ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க சமூக வலை தளங்களை பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவார்கள் என, ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.
ராணுவ தினத்தையொட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு தருணங்களில் துணிச்சலுடன் செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு வீர தீர விருதுகளை ராணுவத் தளபதி பிபின் ராவத் வழங்கி கவுரவித்தார். நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதையும் செலுத்தினார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப் போரை தொடர்ந்து நடத்திவந்தாலும், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைதியை நிலைநாட்டவே நாம் விரும்புகிறோம்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்படும் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்க நாம் தயங்கப்போவதில்லை.
எல்லையில் அமைதியை நிலைநாட்ட நாம் மேற்கொள்ளும் முயற்சிகளை நம்முடைய பலவீனமாக யாரும் கருதிவிடக்கூடாது. அமைதியை சீர்குலைக்க யாரேனும் முயற்சித்தால் அதனை சகித்துக்கொள்ள முடியாது. யாருடனும் நட்புக்கரம் நீட்டவே நாம் விரும்புகிறோம். அதே சமயம் அமைதி சீர்குலைக்கப்பட்டால், நம்முடைய ராணுவ பலத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க ராணுவத்துடன் விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இதுவே வெற்றிக்கான திறவுகோளாக அமையும்’ என்றார்.
மேலும், சமூக வலை தளங்களின் மூலம் ராணுவத்தினர் புகார் எழுப்புவது குறித்து தளபதி பிபின் ராவத் குறிப்பிடும்போது, ‘வீரர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அதற்கென அமைக்கப்பட்டிருக்கும் முறையான வழிகளின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். முறைப்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் திருப்தியில்லை என்றால், என்னை நேரடியாக தொடர்புகொள்ளலாம்.
குறைகளை தெரிவிக்க சமூக வலை தளங்களை பயன்படுத்துவது விதிமீறலாகும். அதற்காக தண்டிக்கப்படவும் வாய்ப்புண்டு. இதுபோன்ற செயல்கள், எல்லையில் பணியாற்றும் துணிச்சல் மிக்க வீரர்களின் மன உறுதியை பாதிக்கும்’ என சுட்டிக்காட்டினார்.