நாட்டின் எல்லைகள் முன்பிருந்ததை விட பாதுகாப்பாக உள்ளன: ராஜ்நாத் சிங் உறுதி

நாட்டின் எல்லைகள் முன்பிருந்ததை விட பாதுகாப்பாக உள்ளன: ராஜ்நாத் சிங் உறுதி
Updated on
1 min read

நாட்டின் எல்லைகள் முன்பிருந்ததைவிட தற்போது கூடுதல் பாதுகாப்பாக உள்ளன. விரைவில் சட்டவிரோத ஊடுருவல் சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் விழா நடத்தப்பட்டது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

முந்தைய அரசுகளின் ஆட்சியை ஒப்பிடும் போதும் தற்போதைய அரசின் ஆட்சியில் நாட்டின் எல்லைப் பகுதிகள் கூடுதல் பாதுகாப்பாகவும், பலமாகவும் இருக்கின்றன. அந்நிய தேசத்தவர்கள் முன் அனுமதி பெறாமல் நமது நாட்டுக்குள் நுழைய முடியாது என்ற நிலைமை அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும்.

நாட்டின் பாதுகாப்புக்காக எல்லை கடந்தும் தாக்குதல் நடத்துவோம் என்ற வலுவான செய்தியை கடந்த ஆண்டு நடத்திய துல்லியத் தாக்குதல் மூலம் நாம் உணர்த்திவிட்டோம். பாகிஸ்தான் மீது நாம் முதலில் தாக்குதல் நடத்தக் கூடது என்றும் அதே சமயம் இந்தியா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் அரசால் வேலைவாய்ப்பு அளிக்க முடியாது. ஆனால் அவர்களது திறனை மேம்படுத்த முடியும். இதன் மூலம் இளைஞர்களால் சொந்தக் காலில் நிற்க முடியும். இதற்காக தான் அரசு நாடு முழுவதும் திறன் வளர்ப்பு மையங்களை தொடங்கியுள்ளது. அந்த மையங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடனும் வழங்கி வருகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 2 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2019-க்குள் 5 கோடி குடும்பங்களுக்கு இந்த இணைப்பு நீட்டிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in