Published : 01 Feb 2017 09:32 AM
Last Updated : 01 Feb 2017 09:32 AM

கேரள எம்.பி. இ.அகமது காலமானார்: பிரதமர், தலைவர்கள் இரங்கல்

நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மயங்கி விழுந்த மக்களவை எம்.பி. இ.அகமது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 78. அவருக்கு மனைவியும் 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவு இணை அமைச்சராக பணியாற்றியவர் இ.அகமது.

அவரது மறைவை ஒட்டி இன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா இல்லையா என்பது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மரபுப்படி கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவையில் இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் இணை அமைச்சரும் கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி.யுமான இ.அகமது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவர் உடனடியாக டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது உடல் பகல் 12 மணி வரையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடல் சொந்த ஊரான கன்னூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அகமது சிறு குறிப்பு:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இ.அகமது 1967, 1977, 1980, 1982 மற்றும் 1987 ஆகிய வருடங்களில் கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார்.

1991, 1998, 1999, 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். 2009 மே மாதம் முதல் 2011 ஜனவரி வரை அவர் வெளியுறவுத் துறை இணைச் செயலாளராக பனியாற்றியிருக்கிறார். 2011-ல் மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தார்.

வெளியுறவு விவகாரத்துறை, ரயில்வே, விமான போக்குவரத்து, சுற்றுலா, பொதுத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் இ.அகமது உறுப்பினராக இருந்திருக்கிறார்.

குடியரசு தலைவர் இரங்கல்:

இ.அகமதுதின் மரணம் குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "வெளியுறவுத் துறை முன்னாள் இணை அமைச்சரும், மக்களவை எம்.பி.யுமான இ.அகமது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மறைந்த இ. அகமது தன்னுடன் நீண்ட காலம் நண்பரகாகவும், சக பணியாளராகவும் இருந்தவர். இ. அகமது தேசிய நலனுக்கு அயராது உழைத்தவர். தேசத்துக்காக அவர் ஆற்றிய நலப் பணிகள் என்று நினைவில் கூரப்படுபவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இரங்கல்:

இ.அகமது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் தனது இரங்கல் குறிப்பில், "கேரள மாநில வளர்ச்சிக்கு இ.அகமதுவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவர் வெளியுறவு இணை அமைச்சராக இருந்தபோது மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். முஸ்லிம் சமுதாயத்தியனரின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய தொண்டு என்றும் நினைவு கூரப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்"

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இ.அகமது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்ட ட்வீட்டில், "இ.அகமதுவின் ஆன்மா சாந்தியடையட்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மக்களவையில் இரங்கல்:

நாடாளுமன்ற எம்.பி இ.முகமத் மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சோனியா, ராகுல் இரங்கல்:

இ.அகமது மறைவிக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,"மறைந்த இ. அகமது சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். இ. அகமது அனைவராலும் ரசிக்கப்பட்ட கேரள தலைவர் ஆவர். அவருடைய எளிமையான வாழ்க்கை முறை அனைத்து தலைமுறையினருக்கு ஒரு உதராணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மூத்த நாடளுமன்ற உறுப்பினர் இ. முகமதுவின் மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இ. முகமது தேசத்துக்காக அர்பணிப்புடனும், நேர்மையாகவும் பணியாற்றிவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட் தள்ளிப்போகுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மறைந்துள்ள நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற குழப்பம் நிலவுகிறது. இது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு மக்களவை முன்னாள் செயலர் பி.டி.டி. ஆச்சாரி கூறும்போது, "மரபுப்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மறைந்தால் அவையை ஒத்திவைக்க வேண்டும். ஆனால், இது நாடாளுமன்ற விதிகளில் இல்லை. உறுப்பினர் ஒருவர் கூட்டத்தொடர் நடக்கும்போது அதுவும் டெல்லியிலேயே மறைந்தாள் மற்ற உறுப்பினர்கள் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக அவை நடவடிக்கை அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால் மக்களவை சபாநாயகரே அவையை நடத்துவது தொடர்பாக இறுதி முடிவெடுப்பார். அவையை வழக்கம்போல் 11 மணி கூட்டி மறைந்த உறுப்பினர் இ.அகமதுவுக்கு இரங்கல் தெரிவித்து அவையை ஒத்திவைத்துவிட்டு பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு அவையைக் கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பிருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x