

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவது உறுதி என தெரிந்ததால், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிக்கவில்லை என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சிறிய வயதில் தான் டீ விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் செய்து வரும் விமர்சனம் குறித்து பேசிய மோடி, “தங்களில் ஒருவன் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளதை நினைத்து டீ விற்பவர்கள் அனைவரும் பெருமைப்படுகின்றனர்” என்றார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் குஜராத் முதல்வரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பேசியதாவது: “பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டீ விற்றவனுக்கு எதிராக போட்டியிடுவதை தங்களின் கவுரவத்துக்கு இழுக்காக உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (சோனியா காந்தி) கருதுகின்றனர். இது அவர்களின் நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் தங்களுக்கு இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு 1984-ம் ஆண்டு ராஜீவ் காந்தியை அக்கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
ஆனால், இப்போது அக்கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தலில் தோல்வி உறுதி என தெரிந்த பிறகு எந்த தாய்தான் (சோனியா) தனது மகனை (ராகுல்) அரசியல் பலிகடாவாக்க விரும்புவார்? அந்த தாயின் இதயம் மகனை பாதுகாக்க முடிவு செய்துவிட்டது.
இதுவரை ஜனநாயகம் என்பது தங்களின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்புவது என்ற நிலையில் இருந்தது. இப்போது நாமே பங்கேற்பது என்ற நிலைக்கு மாறியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், மாத ந்தோறும் ஏதாவதொரு விவகாரம் தொடர்பாக குழு அமைப்பதையே பணியாக மேற்கொண்டு வருகிறார். மசோதாக்களை மட்டும் நிறைவேற்றினால் போதாது. அதை மன உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.
நல்லாட்சி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமானதாக இருக்காது. ஏழைகள், தலித்துகள், நலிவடைந்த பிரிவினரின் தேவைகளான பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்கித் தருவதே நல்லாட்சியாக இருக்க முடியும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநில அரசுகளையும் தங்களுக்கு இணையாக நடத்தும்.
தொலைநோக்குத் திட்டங்கள்
பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நகரங்கள் நவீனமயமாக்கப்படும். மாநிலம்தோறும் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி.க்கள், எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். நாடு முழுவதும் தொலைத்தொடர்பை மேம்படுத்த ஆப்டிக்கல் பைபர்களை (கண்ணாடி இழை) பதிக்கும் பணியும், நதி நீர் இணைப்பும் மேற்கொள்ளப்படும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தைப் போன்று புல்லட் ரயில் பாதை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்படும். திறன் மேம்பாடு, சுற்றுலாத்துறை வளர்ச்சி, பாரம்பரியத்தை காத்தல், வர்த்தகம், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, சீராக வைத்திருப்பதற்காக நிதியம் ஒன்று ஏற்படுத்தப்படும். விவசாய உற்பத்தி தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அதற்கேற்ப ஏற்றுமதி தொடர்பாக முடிவு செய்யப்படும். தேசிய விவசாய சந்தை ஏற்படுத்தப்படும். கருப்புச் சந்தை தொடர்பான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும்” என்றார் மோடி.