

இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடேவின் ஆடைகளைக் களைந்து அமெரிக்க போலீஸார் சோதனையிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சி போலியானது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத் தில் துணைத் தூதராகப் பணி யாற்றிய தேவயானி கோப்ரகடே விசா மோசடி வழக்கில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி கைது செய் யப்பட்டார்.
அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதா வுக்கு விசா பெற தவறான தகவல்களை அளித்ததாகவும் பணிப்பெண்ணுக்கு மிகக் குறைவான ஊதியம் அளித்ததா கவும் அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
கைது நடவடிக்கையின்போது தூதர் என்றும் பாராமல் தேவயா னியை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது, ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியதற்காக இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவயானி கோப்ரகடேவின் ஆடைகளைக் களைந்து அமெரிக்க போலீஸார் சோதனையிடும் காட்சி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சில தனியார் செய்தி சேனல்களும் அந்த வீடியோவை ஒளிபரப்பின.
அமெரிக்கா விளக்கம்
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் தலைநகர் வாஷிங்டனில் நிருபர் களிடம் கூறியதாவது: தேவயானி கோப்ரகடே தொடர்பான வீடியோ போலியானது. அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் சில ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன. வீடியோ காட்சியால் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இணையதளங் களில் வெளியாகியுள்ள போலி விடியோ கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தேவயானியை கைது செய்த அமெரிக்க மார்ஷல்ஸ் போலீ ஸாரை வெளியுறவுத் துறை தொடர்பு கொண்டு விளக்கம் கோரியது. அந்த வீடியோவில் இருப்பவர்கள் நாங்கள் அல்ல என்று மார்ஷல்ஸ் போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். வீடியோவில் காணப்படும் பெண் நிச்சயமாக தேவயானி கோப்ரகடே அல்ல என்றார்.
இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவோம்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் அளித்த பேட்டியில், தேவயானி கைது விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும் விரைவில் சுமுக உறவு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தேவயானி ஆவணங்களைப் பரிசீலிக்கிறோம்
கைது சம்பவத்தைத் தொடர்ந்து தேவயானி ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேரி ஹார்ப்பிடம் கேட்டபோது, தேவயானியின் ஆவணங்களைப் பரிசீலித்து வருகிறோம், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் முடிவெடுக்க எவ்வளவு நாளாகும் என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது என்றார்.