

பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு டெல்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் பேசியது: அரசு நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் என்றால் அவை, சந்தையில் நிலவும் போட்டியில் இருந்து விலக்கப்பட்டவை அல்ல. பொதுத் துறை நிறுவனங்களுக்கு பெருமளவில் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் இருந்து அவற்றை விலக்கி வைத்திருக்கக் கூடாது. அதிகாரிகள் கட்டுப்பாடுகளில் இருந்து அவை விடுபட வேண்டும்.
இது விஷயத்தில் அரசுகள் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். தனியார், பொதுத்துறை நிறுவனங்களிடையே நியாயமான போட்டி இருக்கும்போது, நிதி மற்றும் அனைத்து வளங்களும் மிகவும் முழுமையாகவும், முழுத்திறனுடனும் பயன்படுத்தப்படும். பிரிக்ஸ் அமைப்பு சர்வதேச அளவில் வலுவான பொருளாதார சக்தியாக வளர்ந்து வருகிறது. எரிபொருள் பரிமாற்றத்துக்கான குழாய் பாதைகளை அமைப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் 5 நாடுகளுக்குமே பயனளிக்கும். அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சவால்களை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
இப்போது சேவைத் துறை ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ளது. உற்பத்தி பொருள்கள் ஏற்றுமதியில் உலகின் யான நாடாக சீனா உள்ளது. ரஷியாவும், பிரேசிலும் மூலதனப் பொருள்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடு தென்னாப்பிரிக்கா என்றார் மன்மோகன்.