

இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப் பில் உள்ள முஸ்லிம் பிரிவினர் இப்தார் விருந்தில் சைவ உணவு களைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கே.எஸ்.சுதர்சன் அவர்களின் முன்முயற்சியால் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்ஆர்எம்) எனும் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதன் குஜராத் மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் தொழிலதிபர் சலீம்கான் (46).
இதுதொடர்பாக சலீம்கான் கூறியதாவது:
எம்ஆர்எம் அமைப்பு சார்பில் சிறப்பு இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதில் பசு பாதுகாப்பைப் பற்றியும், மாட்டிறைச்சி உணவால் ஏற் படும் தீமைகளைப் பற்றியும் விளக்கப்படும். குரான், ஹதீத்-ல் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவறாகப் எடுத்துக் கொண்டதால் முத்தலாக் விஷயத்தில் முஸ்லிம் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப் படுகின்றனர். இவர்கள் சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.
அகமதாபாத் மற்றும் பரூச் பகுதிகளில் முத்தலாக்-கால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு சுயவேலை வாய்ப்பு பற்றிய நிகழ்ச்சியை முஸ்லிம் மகிளா சம்மேளன் மூலம் நடத்தினோம். ரம்ஜானை முன்னிட்டு அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், பெரிய நகரங்களில் சிறப்பு இப்தார் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து இந்து, முஸ்லிம் சமூகத்தினர் அழைக்கப்படுவார்கள். இதில் பசும் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், சைவ உணவுகளை வழங்க இருக்கிறோம். எங்களது நோக்கமே முஸ்லிம்கள் பற்றி இந்துக்களிடமும், இந்துக்களைப் பற்றி முஸ்லிம்களிடமும் உள்ள தவறான எண்ணங்களைக் களைவதுதான். சிறப்பு இப்தார் நிகழ்ச்சிக்கு எம்ஆர்எம் அமைப்பின் காப்பாளர் இந்திரேஷ் குமார் அழைக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்ஆர்எம் அமைப்பின் அகமதாபாத் நகர கண்காணிப்பாளரான இக்பால் சையது (64) கூறுகையில், ‘இப்தார் நிகழ்ச்சியில் குஜராத்தின் பிரபல சைவ உணவுகளான பாஜியா, தல்வாடா, ஆம்ராஸ் மற்றும் பழங்கள், பசும்பாலால் தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்படும். எங்களது நோக்கம் முஸ்லிம் சமூகத்தினர் இடையே ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றுவதுதான். மேலும், பெண்களின் பாதுகாப்பு, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வது போன்றவை ஆகும்’ என்றார்.