

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் சோனியா காந்தி. அப்போது அவர்: தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றலாம் என பா.ஜ.க.-வினர் பகல் கனவு காண்கின்றனர். ஆனால் இந்திய தேசம் அவர்களது சுயநலத்திற்கு பலியாகாது. பதவிப் பேராசையில், பா.ஜ.க.-வினர் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்கின்றனர் என்றார்.
இந்திய தேசத்தின் கலாச்சாரத்தையும், சகோதரத்துவ கோட்பாடுகளையும், இரக்கம், தியாக உணர்வுகளையும் பா.ஜ.க.வினர் ஒரு போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் சகோதரர்களுக்குள் சண்டை மூட்டி விட்டு அதில், ஆதாயம் தேடுவார்கள். பா.ஜ.க.வினரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, இவ்வளவு காரசாரமாக சோனியா காந்தி விமர்சித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
சத்தீஸ்கரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, சோனியாவை தாக்கிப் பேசியிருந்தார். தனக்கு உடல் நலம் சரியில்லாததால் ராகுல் காந்தியை ஆட்சியில் அமர்த்த சோனியா காந்தி ஆசைப் படக்கூடாது என கூறியிருந்தார்.