

கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது வில், அம்பு, கத்தி உட்பட 400 ஆயுதங்கள், ரொக்க பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்குவங்க மாநிலத்தில் வங்கமொழி திணிப்பை எதிர்த்தும் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தியும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பு சார்பில் கடந்த 12-ம் தேதிமுதல் காலவரையற்ற முழுஅடைப்பு போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. இந்தப் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
போராட்டத்தை முன்னின்று நடத்தும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குரூங் தலைமறைவாக உள்ளார். டார்ஜிலிங்கில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது வில், அம்பு, கத்தி, பேஸ்பால் மட்டைகள், வெடிப்பொருட்கள் என 400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெருமள வில் பணமும் கைப்பற்றப்பட்டது.
பிமல் குரூங் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட தகவல் பரவியதும் டார்ஜிலிங் மலைப் பகுதி முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. டார்ஜிலிங்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது போராட்டக்காரர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
அங்கு நின்றிருந்த செய்தி நிறுவனத்தின் காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். பின்னர் தடியடி நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
பீடாங் பகுதியில் போலீஸ் புறநகர் பூத் உள்ளது. அந்த பூத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் பொதுச்செயலாளர் ரோஷன் கிரி கூறியதாவது:
டார்ஜிலிங் மலைப் பகுதியில் தற்போது நிலவும் பதற்றத்துக்கு மாநில அரசே காரணம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்கள் அமைப்பின் தலைவர் வீட்டில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக போலீ ஸார் கூறுவது பொய். விரைவில் நடைபெற உள்ள எங்கள் பாரம்பரிய விழாவில் அம்பு எய்தல் போட்டி நடைபெறும். அந்த போட்டிக்கான வில், அம்புகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களும் எங்கள் அமைப் பினர் வீடுகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது ஓர் அரசியல் பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து விரைவில் தீர்வு காண வேண்டும். கூர்க்காலாந்து தனி மாநிலம் உதயமாகும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.