

ஷினா போரா கொலை வழக்கு கைதியான இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப் படையில் மும்பை பைகுல்லா சிறை அதிகாரிகளுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுப்பதற்கு அனுமதி வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷினா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது தாய் இந்திராணி முகர்ஜி, மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 23-ம் தேதி சக கைதியான மஞ்சு கோவிந்த் ஷெட்டி (45), சிறை அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து கடந்த 24-ம் தேதி சிறையில் ஏற்பட்ட கலவரத்துக்கு இந்திராணி முகர்ஜி உட்பட 200 கைதிகள் காரணம் எனக்கூறி அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மஞ்சு கோவிந்த் இறந்த சம்பவம் தொடர்பாக நாக்பாடா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிறை அலுவலர்கள் 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மஞ்சு கோவிந்த் உயிரிழந்த சம்பவத்தில் அவருக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க இந்திராணி முகர்ஜி உட்பட சக கைதிகள் சிலர் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திராணி முகர்ஜியை போலீஸார் அடித்துத் துன்புறுத்தியதுடன், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், ‘மஞ்சு கோவிந்த்துக்கு நேர்ந்ததைப் போல அதே கதி உனக்கும் நேரும்’ என போலீஸார் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது வழக்கறிஞர் குன்ஜான் மாங்லா மூலம் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்திராணி முகர்ஜி வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.சி.ஜக்டேல் முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்ட இந்திராணி முகர்ஜி, ‘தன்னை சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தினர்’ என தெரிவித்தார்.
இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி, நாக்பாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறும் இந்திராணிக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
‘இழுத்துச் சென்றனர்’
முன்னதாக இந்திராணி முகர்ஜி கூறும்போது, ‘உயிரிழந்த மஞ்சு கோவிந்த் ஷெட்டியை சிறை அலுவலர்கள் கழுத்தில் சேலையை இறுக்கி இழுத்துச் சென்றனர்’ என்றார். இதையடுத்து ஷெட்டி வழக்கு குற்றப்பிரிவு விசா ரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறைத்துறை காவல் கூடுதல் இயக்குநர் பூஷன்குமார் உபாத்யாய் கூறும் போது, ‘சிறை அலுவலர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய் துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.