Published : 12 May 2017 09:29 AM
Last Updated : 12 May 2017 09:29 AM

நேர்மையான டாக்ஸி ஓட்டுநரின் கடனை அடைத்த டெல்லிவாசிகள்

ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பையைத் திருப்பி அளித்த டாக்ஸி ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு இருந்த ரூ.70,000 கடனை டெல்லிவாசிகள் திருப்பிச் செலுத்தியுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் தேவேந்திர கப்ரி. அவரின் வண்டியில் மே 3-ம் தேதியன்று ஒருவர் விமான நிலையத்தில் இருந்து பஹார்கஞ்ச் வரை பயணித்துள்ளார். அப்போது அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பையை வண்டியிலேயே தவறவிட்டுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து, டாக்ஸியில் ஒரு பை இருப்பதைப் பார்த்த கப்ரி, விமான நிலையக் காவல்துறையை அணுகினார். அவர்கள் பணத்துக்கு உரியவரைக் கண்டறிந்து, பணப் பையை அவரிடம் ஒப்படைத்தனர்.

தேவேந்திர கப்ரியின் நேர்மையை ஏராளமானோர் பாராட்டினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஆனால் அப்போதுதான் அவர் கடனில் இருந்தது தெரியவந்தது.

ரூ.70,000 கடன்

தேவேந்திர கப்ரி தனது சொந்த ஊரான பிஹார் மாவட்டத்தின் பாங்கா பகுதியில் தனியார் ஃபைனான்சியரிடம் 70 ஆயிரம் ரூபாயைக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது.

தேவேந்திர கப்ரியின் தந்தை, தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுப்பதற்காக 2008-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்தை மாதம் 5% வட்டிக்கு கடனாகப் பெற்றிருந்தார். ஆனால் விவசாயியான அவரால் வட்டியைக் கூடச் செலுத்த முடியவில்லை.

வானொலியில் பிரச்சாரம்

இதை அறிந்த தனியார் வானொலி ஒன்று, அவருக்கு நிதி திரட்டப் பிரச்சாரம் மேற்கொண்டது. அதற்கு அவர்களே எதிர்பாராத அளவு பணம் குவிந்தது. ஒரு மணி நேரத்தில் ரூ.70,000 தொகை வசூலானது.

அதைத் தொடர்ந்த சில மணித்துளிகளில் 1 லட்சம் ரூபாய் கிடைத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

தேவேந்திர கப்ரியின் தன்னலமில்லாத உதவிக்குக் கிடைத்த பரிசு இது என்று அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x