

பிரதமர் நரேந்திர மோடி தனது 66-வது பிறந்த நாளை முன்னிட்டு தன் தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.
பிரதமர் மோடி தனது 66வது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை குஜராத் சென்றார்.
குஜராத் வந்த மோடியை ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தனது கட்சியினரின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்ட மோடி ராஜ் பவன் சென்றார்.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை காந்தி நகரில் உள்ள தனது இளைய சகோதரர் பங்கஜ் இல்லம் சென்றார். அங்கு அவரது தாயார் ஹிரபா மோடியை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
குஜராத் ஆளூநர் ஓ.பி.கோலியும் பிரதமர் மோடிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் மோடிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குஜராத் பயணத்தின் இறுதி கட்டமாக பழங்குடி மக்களுக்கு அறிவித்திருந்த பாசன திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் மோடி. அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் தெற்கு பகுதியான நவ்சரியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
ஜிக்னேஷ் மேவானி கைது
பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் தலித் செயல்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி உட்பட சிலரை போலீஸார் கைது செய்தனர்.
குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் வாழ்த்து
இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரியும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.