Last Updated : 05 Jun, 2016 01:00 PM

 

Published : 05 Jun 2016 01:00 PM
Last Updated : 05 Jun 2016 01:00 PM

வங்கதேச எல்லையில் உள்ள மதரசாக்களே தேசவிரோத சக்திகளின் உற்பத்தியிடம்: பாஜக தலைவர் கருத்து

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், வங்கதேச எல்லையில் உள்ள மதரசாக்களே தேச விரோத சக்திகளின் உற்பத்தியிடமாக விளங்குகிறது என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

“எல்லப்பகுதிகளில் உள்ள மதரசாக்கள்தான் தேச விரோத சக்திகளின் உற்பத்தியிடம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த மதரசாக்களுக்கு அயல்நாடுகளிலிருந்து பணம் வருகிறது. இந்த மதரசாக்கள் ஒரு சங்கிலி அமைப்பை உருவாக்கி இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியை சட்ட விரோத கால்நடை வர்த்தகம் மற்றும் கடத்தல், தேசவிரோத சக்திகளின் உற்பத்தியிடமாக மாற்றியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா, மேற்கு வங்கத்தின் எல்லையில் உள்ள மதரசாக்கள் அடிப்படைவாதங்களின் உற்பத்தியிடம் என்றார். ஆனால் அவருக்கு கட்சியிலிருந்து நெருக்கடிக் கொடுக்க தனது கூற்றை அவர் வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனால் ஒரு முதல்வரின் கருத்தை அவ்வளவு சுலபத்தில் நாம் விட்டு விடமுடியாது. அவர் இவ்வாறு கூறுகிறார் என்றால் உளவுத்துறை மற்றும் போலீஸின் தகவல்களைக் கொண்டே கூறியிருப்பார்.

இந்திய-வங்கதேச எல்லையில் இன்றும் ஊடுருவல் நின்றபாடில்லை. எப்போது எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் விசாரணையின் தடம் வங்கதேசத்தை நோக்கியே செல்வதை நாம் பார்க்கிறோம். தேச விரோத, சமூக விரோத சக்திகள் இந்திய-வங்கதேச எல்லையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அசாமில் புதிதாக உருவான அரசு மேற்கொண்டது போல் மேற்கு வங்க மாநிலம் ஏன் இந்திய-வங்கதேச எல்லைக்கு சீல் வைக்கக் கூடாது?

இந்த எல்லைப்புற மதரசாக்களுக்கு எதிராக நாங்கள் போராடவுள்ளோம். மக்களிடமும் இங்கு நடைபெறும் தேச விரோத போக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். தேச விரோத சக்திகளுக்கு உதவும் இந்த மதரசாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டமன்றத்தில் நாங்கள் போராடுவோம்.

ஜே.என்.யூ., ஜாதவ்பூர், ஹைதராபாத் பல்கலைக் கழகங்களை தேச விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்” இவ்வாறு கூறினார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x