Last Updated : 13 Jul, 2016 11:34 AM

 

Published : 13 Jul 2016 11:34 AM
Last Updated : 13 Jul 2016 11:34 AM

திரைப்பட திருட்டை தடுக்க தணிக்கை வாரியம் புதிய யோசனை: பாஸ்வேர்ட் டிஜிட்டல் பிரதிகளை அளித்தால் போதுமானது

திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே அவை இணைய தளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்(சிபிஎப்சி) புதிய யோசனை அளித்துள்ளது. இனி தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் பாஸ்வேர் டுடன் கூடிய டிஜிட்டல் பிரதிகளை மட்டுமே அளிக்க வேண்டும் என உத்தரவிட உள்ளது.

சமீபத்தில் ‘உட்தா பஞ்சாப்’, ‘கிரேட் கிராண்ட் மஸ்தி’ ஆகிய இந்தி திரைப்படங்கள் அதன் ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே இணைய தளங்களில் வெளியாகின. இதற்கு சிபிஎப்சி தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது, இத்திரைப் படங்கள் சிபிஎப்சி அலுவலர் களால் இணையதளங்களுக்கு கசிய விடப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு சிபிஎப்சி அப்போது மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்கவும் இணையதளங்களில் படம் முன்கூட்டியே வெளியாவதை தடுக்கவும் சிபிஎப்சி புதிய யோசனையை முன்வைக்க உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் சிபிஎப்சி வட்டாரங்கள் கூறும் போது, “தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, தற்போதுள்ள விதி முறைகளில் மாற்றம் செய்ய இருக்கிறோம். புதிய விதிப்படி, தணிக்கை சான்றிதழ் கோரும் விண்ணப்பத்துடன் திரைப்படத் தின் டிஜிட்டல் பிரதியை பாஸ் வேர்ட் வைத்து அனுப்ப வேண்டும். தணிக்கை குழு உறுப்பினர்கள் திரைப்படத்தை பார்வையிடும் போது, திரைப்படத் தயாரிப்பாளர் சார்பில் ஒருவர் நேரில் வந்து பாஸ்வேர்ட் போட்டு திறக்க வேண் டும். இதனால் படங்கள் ரீலீஸ் ஆவதற்கு முன் அவை வெளியாவ தற்கு எங்கள் அலுவலகம் பொறுப் பாக வாய்ப்பில்லை” என்று தெரி வித்தனர்.

இதற்கான உத்தரவு விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர் பாக சிபிஎப்சி உறுப்பினர்களுடன் அதன் தலைவர் பஹலஜ் நிஹலானி இறுதி ஆலோசனை நடத்த உள்ளார்.

பாஸ்வேர்டு உடன் டிஜிட்டல் பிரதியை அளிக்கும் இந்த புதிய முறையால் திரைப்பட நகலனாது, அதன் தயாரிப்பாளர்கள் வசமே இருப்பது போலாகி விடும். இத்துடன் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளையும் அத்திரைப்படம் வெளியாகும் தேதியில் சிபிஎப்சி.யிடம் அளித்தால் போதுமானது என்றும் விதிமுறை வகுக்கப்பட உள்ளது. சில சமயம் தணிக்கை யில் வெட்டப்பட்ட காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி விடுவதால் சிபிஎப்சி தன் மீதான புகாரை தவிர்க்க முயல்வதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட விதிமுறை இந்தி திரைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கருதப்படுகிறது. காரணம் தமிழ் உட்பட மற்ற மொழித் திரைப்படங்கள் அவற்றின் தயாரிப்பாளர்களால் தனியார் திரையரங்குகளில் தணிக்கை உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்படுகின்றன. இதனால் இந்தியை தவிர மற்ற மொழிப் படங்கள் திருடப்படும் வாய்ப்பு குறைவு. எனவே இந்த புதிய உத்தரவு, இந்தி திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.

கடந்த ஜூன் 17-ல் வெளியான ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தின் கதை, பஞ்சாபில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கம் தொடர்பானது. இப்படத்துக்கு ஆளும் சிரோமணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. இந்நிலை யில் ரிலீஸ் தேதிக்கு இரு தினங் கள் முன்னதாக இப்படம் இணைய தளங்களில் வெளியானது. இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

‘கிரேட் கிராண்ட் மஸ்தி’ வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது. இதுவும் முன்னதாகவே இணைய தளத்தில் வெளியானதில் சிபிஎப்சி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x