

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை முன்னிறுத்தி, உ.பி. தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த 2014-ல் மக்களவை தேர்தலில் ஊழல் ஒழிப்பை முன்னிறுத்திய பாஜக, அதன் மறு உருவமாக பண மதிப்பு நீக்கத்தை பார்ப்பதே இதற்கு காரணம் ஆகும்.
தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான ஊழல் புகார்களை முன்வைத்து கடந்த 2014 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். பொதுமக்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றதால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்தது. எனவே இந்தப் பிரச்சாரத்தையே உ.பி. தேர்தலிலும் பாஜக தொடர்கிறது. ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான பண மதிப்பு நீக்கத்தை முக்கியமாக முன்னிறுத்தவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. உ.பி. தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. என்றாலும் இதற்கு முன்னதாகவே அனைத்து கட்சிகளும் இங்கு தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. பாஜக பிரச்சார மேடைகளிலும் தொடர்ந்து பேசிவரும் பிரதமர் மோடி அவற்றில் தனது பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதாக பாஜக கருதுகிறது.
இது குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் காந்த் சர்மா ‘தி இந்து’விடம் கூறும்போது, “மத்தியில் சிறந்த ஆட்சி நிர் வாகம், வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவது ஆகியவற்றில்தான் பாஜக அதிக நம்பிக்கை வைத்துள்ளது. இதன் பலனாக எங்களுக்கு உ.பி.யிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம். கறுப்புப் பணத்துக்கு எதிரான பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் நாடு முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த அறிவிப்பின் மீது மற்ற கட்சிகள் தங்கள் உறுதியான நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் இருப்ப தும் கவனிக்கத்தக்கது. எனவே இதை உ.பி. தேர்தலில் நாங்கள் எடுத்துக்கூறுவது சரியாக இருக்கும் என கருதுகிறேன்” என்றார்.
உ.பி. உட்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 4 முதல் மார்ச் 8 வரை தேர்தல் நடைபெறும் என நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதில் 403 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக இடையே மும் முனைப் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி. தேர்தலில் முதல்வர் வேட் பாளராக பாஜக யாரையும் முன்னி றுத்தவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிரச்சாரமே இங்கு பிரதானமாக உள்ளது. இதனிடையே பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மற்ற 4 மாநில தேர்தல்களிலும் பாஜக முன்னிறுத் தும் என எதிர்பார்க்கப்படுகிறது.