Published : 15 Aug 2015 03:16 PM
Last Updated : 15 Aug 2015 03:16 PM

69-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஒற்றுமையே இந்தியாவின் வலிமை - செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் வலிமை. 125 கோடி இந்தியர்களும் ஓரணியாகச் செயல்பட்டு நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 69-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்த நாள் சாதாரண நாள் அல்ல. இந்தியர் களின் கனவுகளை நனவாக்க சபதமேற்கும் நாள். நமது நாட்டை அடித்தளத்தில் இருந்து வலுவாக கட்டி எழுப்ப வேண்டும். அப்போது தான் நமது கனவுகளும் சாத்தியமாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது பண்பு உலகமெங்கும் போற்றி கொண்டாடப்படு கிறது. இங்கு சாதி, மதவாதத்துக்கு இடமில்லை. ஒற்றுமை, சகோதரத்துவம்தான் நமது வலிமை. நமது ஒற்றுமை குலைந்தால் நாமும் உடைந்துவிடுவோம்.

நாம் ‘டீம் இந்தியா’ என்ற அணியில் உள்ளோம். இந்த அணியில் 125 கோடி இந்தியர்கள் உள்ளனர். நமது நாடு உயர்ந்த நிலையை எட்ட ‘டீம் இந்தியா’ ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தொழில் துறையை ஊக்குவிக்க ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’ என்ற புதிய கொள்கையை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்லும். நாடு முழுவதும் சுமார் 1.25 லட்சம் வங்கிக் கிளைகள் உள்ளன. ஒவ்வொரு வங்கியிலும் ஒரு தலித், ஒரு பழங்குடி, ஒரு பெண்ணுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட வேண்டும்,

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்

ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை கொள்கை அளவில் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதனை அமல்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதற்கு தீர்வு காண ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

சமையல் காஸ் நேரடி மானியத் திட்டத்தால் சுமார் ரூ.15,000 கோடி அளவுக்கு அரசுக்கு மிச்சமாகியுள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருப்பு பணத்தை பதுக்க முடியாத அளவுக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தானாக முன்வந்து கருப்பு பண விவரங்களை தெரிவிக்கும் சலுகை திட்டத்தில் இதுவரை ரூ.6,500 கோடி அளவுக்கு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஊழல் என்பது ஒரு கொடிய நோய். அது கரையான் போல நாட்டை அரிக்கிறது. அதனை கட்டுப்படுத்த வீரியமிக்க மருந்து தேவைப்படுகிறது. ஊழலற்ற தேசத்தை உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு.

17 கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு

ஜன் தன் யோஜனா திட்டத்தில் இதுவரை 17 கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடல் பென்ஷன் யோஜனா, சுரக்‌ஷா பீமா யோஜனா, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சுதந்திர தின உரையின்போது கழிப்பறை குறித்தும் சுகாதாரம் குறித்தும் பேசினேன். அதை சிலர் எதிர்மறையாக விமர்சனம் செய்தனர். இன்று நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

வேளாண் உற்பத்தி பெருக்கப்படும்

வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. அதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வேளாண் அமைச்சகம் இனி

‘வேளாண், விவசாயிகள் நலத்துறை’ என்றழைக்கப்படும். வேளாண் வளர்ச்சியில் இருந்து விவசாயிகளின் நலனைப் பிரிக்க முடியாது.

அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி இன்னமும் 18,500 கிராமங்களில் மின் வசதி இல்லை. இன்னும் 1,000 நாட்களில் மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x