

தேர்தலில் வாக்குகளை வளைக்க பணம் கொடுக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்யும் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
தற்போது, வாக்குகளுக்காக பணம் கொடுப்பது உறுதியானால், தேர்லை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ அரசியலமைப்புச் சட்டம் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.
ஆனால், தேர்தலில் பண பலத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதைத் தடுக்க, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அரசை, தேர்தல் ஆணையம் கோரிவருகிறது.
தேர்தலில் வெற்றி பெற அல்லது வாக்குச்சாவடி மையங்களைக் கைப்பற்றுவதற்கு ஆள்பலம் பயன்படுத்தப்பட்டால் அப்போது தேர்தலை ரத்து செய்ய மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு அதிகாரமளிக்கிறது.
பணபலத்துக்கு எதிராக, தேர்தலை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விரும்புகின்றனர்.
இதுதொடர்பான சட்டத் திருத்தம் மேற்கொள்ளும்படி, சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 27-ம் தேதி, வாக்காளர்களுக்கு அதிக அளவு பணம் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதி களுக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யும்படி தமிழக ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அந்த இரு தொகுதிகளுக்கு இதுவரை தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2012-ம் ஆண்டு ஜார்க் கண்ட் மாநிலத்துக்கான மாநிலங்களவை தேர்தலில் பணபலம் பிரயோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தலை ரத்து செய்யும்படி குடியரசுத் தலைவ ருக்கு தனது அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
வரும் 11-ம் தேதி நடை பெறவுள்ள மாநிலங்களவை தேர்தலையொட்டி, எம்எல்ஏக் களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக ஸ்டிங் ஆபரேஷன் வீடியோக்கள் வெளியாகின. இதுதொடர்பாக கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடந்த 3-ம் தேதி அறிக்கை கோரியுள்ளது தேர்தல் ஆணையம்.