பெங்களூரில் சோகம்: சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள்

பெங்களூரில் சோகம்: சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள்
Updated on
1 min read

பெங்களூரை சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன், தெருநாய்கள் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்தான். சிறுவனுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனை மறுத்ததால் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பெங்களூரில் உள்ள ஜே.பி.நகரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், நாகம்மா தம்பதி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர்கள் அங்குள்ள குவாரியில் கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனர். இவர்களது ஒன்றரை வயது மகன் குமாரசாமி. நேற்று முன்தினம் குமாரசாமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அச்சிறுவனைக் கடித்து குதறின.

நாய்கள் சிறுவனை கடித்துக் குதறுவதை பார்த்த பொதுமக்கள் நாய்களை அடித்து விரட்டியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சிறுவனை மீட்ட அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்ப‌ட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக மல்லேஸ்வரம் கெம்பே கவுடா அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவனின் கழுத்து, தலை, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படும்

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரில் தெரு நாய்களால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாவது வருத்தத்திற்குரியது. கடந்த ஆண்டு ஒரு குழந்தை நாய் கடித்து பலியானது. தற்போதும் அதே நிலை தொடர்வது மாநகராட்சியின் அலட்சியத்தை காட்டுகிறது. உடனடியாக தெருநாய்களை கட்டுக்குள் கொண்டுவர மாநாகராட்சி முன்வர வேண்டும். கர்நாடக அரசு சார்பிலும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல படுகாயமடைந்த‌ சிறுவனுக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்ததாக தெரியவந்துள்ளது.மனிதாபிமானம் இல்லாதவர்கள் நல்ல மருத்துவர்களாக இருக்க முடியாது. அலட்சியம் காட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in