மும்பையில் சிகிச்சை பெற்று வரும் உலகின் குண்டு பெண்மணி இமானின் உடல் எடை 242 கிலோ ஆக குறைந்தது

மும்பையில் சிகிச்சை பெற்று வரும் உலகின் குண்டு பெண்மணி இமானின் உடல் எடை 242 கிலோ ஆக குறைந்தது
Updated on
1 min read

மும்பை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின் எகிப்தைச் சேர்ந்த உலகின் குண்டு பெண்மணியான இமான் அகமது உடல் எடை பாதியாக குறைந்துள்ளது.

எகிப்தின் அலெக் சாண்டிரியாவைச் சேர்ந்த இமான் அகமது. 500 கிலோ எடையுடன் உலகின் குண்டுபெண்மணியாக தனது வீட்டிலேயே முடங்கி கிடந்தார். சக மனிதர்களைப் போல வாழ ஆசைப்பட்ட இமான் அகமது, மும்பையைச் சேர்ந்த எடை குறைப்பு நிபுணர் முபாஸல் லக்டாவாலாவைத் தொடர்புகொண்டு தனக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் லக்டாவாலாவின் மருத்துவ குழுவினர் கடந்த ஆண்டு எகிப்து சென்று, இமானின் உடல் நிலை குறித்து பல்வேறு மருத்துவ சோதனைகள் எடுத்தனர். பின்னர் மத்திய அரசின் அனுமதி பெற்று, கடந்த பிப்ரவரி 11-ம் தேதி மும்பைக்கு அழைத்து வரப்பட்டார்.

திரவ உணவு மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட எடை குறைப்புக்கான ஆரம்பக் கட்ட சிகிச்சையில் அவரது உடல் எடை 120 கிலோ வரை குறைந்தது. உணவு விழுங்குவதில் இருந்த சிரமங்களும் களையப்பட்டன. எனினும் சிலமுறை அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் மரபணு தொடர்பான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை கிடைத்ததும் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அவர் தற்போது 242 கிலோ வரை எடை குறைந்து காணப்படுகிறார். இதயம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடலின் முக்கிய பாகங்கள் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் பக்கவாதம் காரணமாக உடலின் வலது பாகம் முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான சிகிச்சைகளும் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in