

மறைந்த தமிழக முதல்வர் ஜெயல லிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.கே. மோகன்ராம் கன்னடத்தில் “அம்மு என்கிற அம்மா : ஜெயலலிதா '' என்கிற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு “லங்கேஷ்'' கன்னடப் பத்திரிகையில் பத்திரிகையாளராக பணியைத் தொடங்கிய என்.கே.மோகன்ராம், தூர்தர்ஷன் நிறுவனத்தில் பத்திரிகை யாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது கன்னட பத்திரிகைகளில் அரசியல், சமூகம், வரலாறு தொடர்பாக தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.
மூத்த பத்திரிகையாளரான அவர், “அம்மு என்கிற அம்மா : ஜெயலலிதா'' (அம்மா ஆதா அம்மு : ஜெயலலிதா) என்கிற தலைப்பிலான கன்னட நூலை நேற்று வெளியிட்டார். 262 பக்கங்களைக் கொண்ட இந்நூல் ஜெயலலிதாவின் குடும்ப பின்னணி, பால்ய காலம், திரையுலக பிரவேசம், அரசியல் வாழ்க்கை, மரணம். குணாம்சம் ஆகிய 6 பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக இதுவரை வெளிவராத ஜெயலலிதாவின் குடும்ப பின்னணி தொடர்பான அரிய புகைப்படங்களும், விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
ஜெயலலிதாவின் மூதாதையர் ரங்கத்தில் இருந்து மைசூருவுக்கு இடம்பெயர்ந்தது, நெல்லூர், லட்சுமிபுரம், மேலக்கோட்டை, மைசூரில் வாழ்ந்தது தொடர்பாக ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. மைசூருவிலும் பெங்களூருவிலும் ஜெயலலிதா தன் தாய் சந்தியாவுடன் கழித்த பால்ய காலம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதேபோல ஜெயலலிதா கன்னட திரைப்படங்களில் நடித்தது, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டது உள்ளிட்ட கர்நாடக தொடர்பான தகவல்களும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பெற்றோர் குறித்து இதுவரை வெளிவராத பல உண்மைகளை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்நூல் நேற்று கடைகளில் விற் பனைக்கு வந்துள்ளது. முதல் நாளான நேற்றே ஏராளமான வாசகர்கள் ஜெய லலிதா குறித்த நூலை ஆர்வமுடன் வாங்கியுள்ளனர். இந்நூலுக்கு கிடைத் துள்ள வரவேற்பின் காரணமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும், மொழிபெயர்த்து வெளியிட இருப்ப தாக மோகன்ராம் தெரிவித்துள்ளார்.