

பெங்களூருவில் உள்ள ஜென் பேக்ட் நிறுவனத்தில் பணியாற்றிய மென்பொருள் பொறியாளர் தனது அலுவலக கட்டிடத்தின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் குல்ஷன் சோப்ரா(28). கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை தேடி பெங்களூரு வந்த இவர், ஹெச்.எஸ்.ஆர். லே அவுட்டில் வசித்து வந்தார். பெல்லந்தூரில் உள்ள ஜென்பேக்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு பணிக்கு சென்ற இவர், 11.30 மணியளவில் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பெல்லந்தூர் போலீஸார், குல்ஷன் சோப்ரா வின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவனைக்கு அனுப்பினர். பஞ்சாபில் இருந்து அவரது பெற்றோர் நேற்று வந்ததைத் தொடர்ந்து சோப்ராவின் உடலை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “அலுவலகத்தில் வேலை பளு அதிகரித்ததன் காரணமாக அவர் கடந்த சில மாதங்களாக தனிமையாக இருந் துள்ளார். மன அழுத்தம் காரண மாக நண்பர்கள் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக தூக்கத்தை இழந்து, இரவில் பணியாற்றியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண் டிருக்கலாம்” என்றனர்.