

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மீண்டும் சமாஜ் வாதி கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் அண்மையில் அறி வித்தார். சில நாட்களுக்கு முன்பு 393 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அவர் வெளியிட்டார்.
இதில் கட்சியின் மாநிலத் தலை வரும் முலாயமின் சகோதரருமான சிவபால் யாதவின் ஆதரவாளர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தனர். முலாயமின் மகனும் மாநில முதல் வருமான அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த அகிலேஷ், தனது ஆதரவாளர்கள் 235 பேர் அடங்கிய போட்டி பட்டி யலை தயாரித்தார். முலாயம் வேட்பாளர்களில் 180-க்கும் மேற்பட் டோர் அகிலேஷின் பட்டியலிலும் இருந்தனர்.
இந்த விவகாரத்தால் முதல்வர் அகிலேஷ் யாதவ், கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் சமாஜ்வாதியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக முலாயம் சிங் நேற்று முன்தினம் அறிவித்தார். உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வரை கட்சி முடிவு செய்யும் என்றும் நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.
இதனிடையே 393 வேட்பாளர் களை நேற்று அழைத்து அவசர ஆலோசனை நடத்த முலாயம் திட்டமிட்டிருந்தார். இந்த கூட்டத் துக்கு 60 பேர் மட்டுமே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதேநேரம் முதல்வர் அகிலேஷ் யாதவை சுமார் 200-க்கும் மேற்பட்ட சமாஜ்வாதி எம்எல்ஏக்கள் நேற்று காலை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
லாலு சமரசம்
தந்தை, மகன் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதியின் மூத்த தலைவர் ஆசம்கான் உள்ளிட்டோர் சமரசத் தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக லாலு பிரசாத் பாட்னாவில் கூறியபோது, “முலாயம், அகிலேஷ் எனது குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். சமாஜ்வாதி யில் ஏற்படும் பிளவு பாஜகவுக்கே சாதகமாக அமையும். இதை தடுக்க இருவரையும் தொலை பேசியில் அழைத்து சமரசம் செய்தேன்” என்றார்.
லாலு, ஆசம்கானின் முயற்சி யால் அகிலேஷ், ராம்கோபால் யாதவ் ஆகியோர் மீண்டும் கட்சி யில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
புதிய வேட்பாளர் பட்டியல்
இதுதொடர்பாக சமாஜ்வாதி யின் மாநிலத் தலைவர் சிவபால் யாதவ் கூறியதாவது: தேசிய தலை வர் முலாயமின் அறிவுரைப்படி அகிலேஷும், ராம்கோபாலும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள் ளனர். புதிய வேட்பாளர் பட்டியலை முலாயமும் அகிலேஷும் இணைந்து தயார் செய்வார்கள். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. சட்டப்பேரவைத் தேர் தலை ஒன்றிணைந்து எதிர்கொள் வோம் என்று தெரிவித்தார்.