

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில் ஜேஎன்யூ சர்ச்சை குறித்து எதிர்க்கட்சிகளுடன் அரசு விவாதிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இதில் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது, பதான்கோட் தீவிரவாத தாக்குதல், டெல்லி ஜேஎன்யூ பல்கலை. விவகாரம் ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
எனவே பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்த டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "ஜே.என்.யூ மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஜேஎன்யூ சர்ச்சை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். மேலும், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்" என்றார்.