கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலி

கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். இதில் 4 பேர் டெல்லி யைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் இருந்து கேபிள் காரில் சுற்றுலா பயணிகள் நேற்று பயணித்தனர். இதில் டெல்லியைச் சேர்ந்த ஜெயந்த் அந்த்ராஸ்கர், அவரது மனைவி மான்சியா, 2 மகள்கள் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகளான முக்தார் அகமது, ஜகாங்கிர் அகமது, பரூக் அகமது சோபான் உள்ளிட்டோர் இருந்தனர்.

அப்போது காற்று பலமாக வீசியதால் அங்கிருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து கேபிள் கார் வயர் மீது விழுந்தது. இதனால் கேபிள் கார் அறுந்து மேலே இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இதில் டெல்லியைச் சேர்ந்த ஜெயந்த் குடும்பத்தினர் அனைவரும் பலியாகினர். மேலும் சுற்றுலா வழிகாட்டிகளான முக்தார் அகமது, ஜகாங்கிர் அகமது, பரூக் அகமது சோபான் ஆகியோரும் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 2 சுற்றுலா வழிகாட்டிகளான தாரிக் அகமது, அஜாஷ் அகமது ஆகியோர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மற்ற கேபிள் கார்களில் 100 பேர் சிக்கித் தவிப்பதாக தெரிய வரவே அவர்களை மீட்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘பலத்த காற்று வீசும்போதும் கேபிள் கார் போக்குவரத்தை ஏன் நிறுத்தவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in