Last Updated : 15 Mar, 2017 05:19 PM

 

Published : 15 Mar 2017 05:19 PM
Last Updated : 15 Mar 2017 05:19 PM

பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த உ.பி. அமைச்சர் பிரஜாபதி கைது

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த உ.பி. அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, சுமார் 1 மாதத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவரது மகளை (சிறுமியை) பலாத்காரம் செய்ய முயன்றதாக பிரஜாபதி மற்றும் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் 7 பேர் மீதும் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் காயத்ரி பிரஜாபதி தலைமறைவானார்.

இதைத் தொடர்ந்து கூட்டு பலாத்கார வழக்கில் பிரஜாபதியின் பாதுகாவலர் சந்திரபால் கடந்த 6-ம் தேதியும், உதவியாளர்கள் இருவர் கடந்த 7-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மேலும் 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் லக்னோ நகரின் ஆஷியானா பகுதியில் காயத்ரி பிரஜாபதி அதிகாலை கைது செய்யப்பட்டதாக, லக்னோ எஸ்எஸ்பி மன்சில் சைனி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “இவ்வழக்கில் 15 – 20 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். பாலியல் சம்பவம் 2013-ல் நடந்தாக புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கு ஏற்றால்போல் அனைத்து ஆதாரங்களை சேகரிப்பதும், விசாரணை மேற்கொள்வதும் அவசியம்” என்றார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் பிரஜாபதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பிரஜாபதி கூறும்போது, “சரண் அடையச் சென்ற என்னை கைது செய்துள்ளனர். நான் அப்பாவி. எனக்கு எதிராக சதி நடக்கிறது. உண்மை கண்டறியும் சோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன். அதுபோல் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்” என்றார்.

உ.பி. காவல்துறை இயக்குநர் ஜாவீத் அகமது கூறும்போது, “பிரஜாபதி தனது மறைவிடத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தார். இதனால் அவரை பிடிப்பது சவாலாக இருந்து. அவரை கைது செய்வதற்கு எதிராக எங்களுக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை” என்றார்.

அமைச்சர் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் உ.பி. போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. பிரஜாபதி கைது மூலம் இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அமேதி தொகுதியில் பிரஜாபதி போட்டியிட்டார். ஆனால் பாஜக வேட்பாளரிடம் அவர் தோல்வி அடைந்தார். உ.பி.யில் புதிய அரசு இன்னும் பொறுப்பேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x