

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையை விமர்சித்துள்ள டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கான ஆதரவை இப்போதைக்கு வாபஸ் பெறப்போவதில்லை எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் முகுல் வாஸ்னிக் பேசுகையில், "பல காரணிகளைக் கருத்தில் கொண்டே ஆம் ஆத்மிக்கான ஆதரவைத் தொடர்வது என முடிவு செய்துள்ளோம். ஆனால் அக்கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்து வருகிறோம். அவர்கள் எவ்வளவு தூரம் ஆட்சியில் சாத்தித்துள்ளார்கள் என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும், நாங்கள் கூற முடியாது. ஆனால் அவர்கள் இன்னும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம். எனவே நாங்கள் பொறுமை காப்போம்" என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரையை நல்ல நகைச்சுவை என்று ட்விட்டரில் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி விமர்சித்த பிறகும் காங்கிரஸின் ஆதரவு தொடர்வதைப் பற்றி கேட்டபோது, "குடியரசுத் தலைவரின் உரையைப் பற்றி இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். பல வருட அரசியல் அனுபவம் பெற்ற ஒருவரது உரையை இப்படி விமர்சிப்பது முறையற்ற அணுகுமுறை. அதே நேரத்தில், ஆம் ஆத்மிக்கான ஆதரவைப் பொருத்த வரை, மக்களுக்கு இன்னொரு தேர்தலின் மூலம் பாரத்தை அளிக்க விரும்பவில்லை. அவர்கள் நலனை மனதில் வைத்து ஆதரவைத் தொடருவோம்" என்று அவர் கூறினார்.