

டெல்லி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 16-ம் தேதி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஜன்லோக்பால் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் கல்வி, பொதுப்பணித் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா நிருபர்களிடம் கூறியதாவது:
பிப்ரவரி 13 முதல் 16 வரையில் சட்டமன்றத்தைக் கூட்ட அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கடைசி நாளில் டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் சட்டமன்றத்தைக் கூட்டி லோக்பால் மசோதாவை நிறைவேற்ற இருக்கிறோம்.
இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொதுமக்களையும் அழைக்க இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இந்த மசோதா, டெல்லியின் ராம் லீலா மைதானத்தில் நிறைவேற்றப்படும் என கேஜ்ரிவால் ஏற்கெனவே அறிவித்ததில் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி டெல்லி போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்துக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப்ஜங் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியபோது, அமைச்சரவைக் கூட்டத்தில் லோக்பால் ஜன்மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து வரும் திங்கள்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
டெல்லி அரசின் ஜன்லோக்பால் மசோதா வரம்பில் முதல்வரும் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் 6 மாதங்களுக்குள் ஊழல் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.