

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அகாலி தளம் கூட்டணி படுதோல்வி அடைந்து 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் சிரோன்மணி அகாலி தளம் - பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. ஆளும் சிரோமணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான பாஜக 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் கட்சி 117 இடங்களிலும் போட்டியிட்டது. மேலும், முதல்வர் வேட்பாளராக அம்ரிந்தர் சிங்கை அறிவித்து தேர்தலை சந்தித்தது காங்கிரஸ். பஞ்சாபில் முதல் முறையாகத் தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மி 112 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.
வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. அப்போது தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கிறது. கருத்துக் கணிப்புகள் கூறியபடியே பஞ்சாபில் ஆளும் அகாலி தளம் கூட்டணி படுதோல்வியை அடைந்தது.
இதனால் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங்குக்கு, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வாழ்த்து தெரிவித்தார். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளித்த மக்களுக்கு, அம்ரிந்தர் சிங் நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “பஞ்சாபை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்ற அகாலி தளத்தை வாக்குகள் மூலம் மக்கள் வெளியேற்றி உள்ளனர். ஆம் ஆத்மியையும் மக்கள் நிராகரித்துள்ளனர். காங்கிரஸ் அமைக்கும் புதிய அரசில் சிறந்த நிர்வாகம், போதைப் பொருள் தடுப்பது, ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றுக்கு முன்னரிமை அளிக்கப்படும்” என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களைப் பிடித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சி அந்தஸ்து அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த அகாலி தளம் எதிர்க்கட்சியாக கூட இல்லாமல் 15 இடங்களுடன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைத்தது. லோக் இன்சாப் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது.
* அனந்த்பூர் சாகிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்வர்பால் சிங் 60,800 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்மிந்தர் சர்மா 36,919 வாக்குள் பெற்றார். இந்தத் தொகுதியில் பாஜக.வைச் சேர்ந்த கேபினட் அமைச்சர் மதன்மோகன் மிட்டல் எம்எல்ஏ.வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் கவுதம் 30,304 வாக்குகள் பெற்றார்.
* ஜலந்தர் மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு 53,983 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் கேபினட் அமைச்சர் சன்னிலால் பகத்தின் மகனுமான மகிந்தர் பால் பகத் 36,649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மி வேட்பாளர் தர்ஷன் லால் பகத் 15,364 வாக்குகளுடன் 3-வது இடத்துக்குத் தள்ளப் பட்டார்.
* ஜலந்தர் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அவ்தார் சிங் ஜூனியர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கே.பி.பண்டாரியை விட 32,291 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
* மத்திய லூதியானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரீந்தர் தவார், காங்கிரஸ் வேட்பாளர் குர்தேவ் சர்மாவை விட 20,480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
* பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதான்கோட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமித் 11,170 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அஷ்வனி குமார் தோல்வி அடைந்தார்.
சண்டிகர்பாஜக மீது சரமாரி புகார்களைத் தெரிவித்துவிட்டு காங்கிரஸில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, அமிர்தசரஸ் தொகுதியில் 42,809 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாஜக.வில் இருந்தார். கட்சியின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்த சித்து, காங்கிரஸில் சேர்ந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் ராஜேஷ் குமார் ஹனி போட்டியிட்டார்.
தேர்தலில் சித்து 60,477 வாக்குகளும், ராஜேஷ் குமார் 17,668 வாக்குகளும் பெற்றனர். சித்து 42,809 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளர் சரப்ஜோத் சிங் 14,715 வாக்குகளுடன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங்குக்கு நேற்று 75-வது பிறந்த நாள். தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி, அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிறந்த நாள் பரிசாக உள்ளது.
பஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 59 இடங்கள் போதும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் முன்னிலை பெற்றது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது, மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங்குக்கு மிகப்பெரிய பிறந்த நாள் பரிசாக கிடைத்துள்ளது.
இதையடுத்து பாட்டியாலாவில் உள்ள மோதி பாக் அரண்மனையில் நேற்று மாலை அம்ரிந்தர் சிங் தனது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினார். இதில் புதிதாக வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ.க் கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற் றனர். பஞ்சாபில் அம்ரிந்தர் சிங் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது