

நாட்டின் மதச்சார்பின்மையை பாஜக அழித்து வருகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அருணாச்சலப் பிரதேசம், ஹபோலி பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மக்களை ஒன்றுபடுத்துவது, அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது ஆகியவைதான் காங்கிரஸின் பிரதான கொள்கைகள். அதற்கு நேர்மாறாக அரசியல்ரீதியாகவும் மதரீதியாகவும் மக்களை பாஜக பிளவுபடுத்தி வருகிறது.
அந்தக் கட்சியின் மதவாத கொள்கைகளால் நீண்ட காலமாக கட்டிக் காக்கப்படும் நாட்டின் மதச்சார்பின்மை சீர்குலைந்து வருகிறது. இதன் அடுத்த பரிணாமமாக இனவெறியும் தலைதூக்கி வருகிறது. வெறுப்புணர்வு, பிரிவினைவாதம் காரணமாகவே அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நிடோ தானியா டெல்லியில் கொலை செய்யப்பட்டார்.
அருணாச்சலம் உள்பட நாட்டின் வடகிழக்கு பிராந்திய மக்கள் வேறு பகுதிகளில் புறக்கணிக்கப்படக்கூடாது. இந்தியா முழுவதும் செல்வதற்கும் வாழ்வதற்கும் அவர்களுக்கு முழுஉரிமை உண்டு.
ஒவ்வொரு மாநிலமும் ஒரு பூவுக்கு ஒப்பானது. பல்வேறு பூக்களைக் கட்டி தொடுத்தால்தான் இந்தியா என்ற பூங்கொத்து முழுமை பெறும். 1972-ம் ஆண்டில் அருணாச்சல் பிரதேசத்துக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி யூனியன் பிரதேச அந்தஸ்தை அளித்தார். 1987-ல் ராஜீவ் காந்தி மாநில அந்தஸ்தை வழங்கினார்.
கடந்த 2008-ம் ஆண்டில் ரூ.10,000 கோடி மதிப்பிலான சாலை திட்டப் பணிகள் நிறை வேற்றப்பட்டன. அருணாச்சல் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு ஆரம்பம் முதலே காங்கிரஸ் அரும்பணியாற்றி வருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.