Last Updated : 17 Sep, 2016 08:21 AM

 

Published : 17 Sep 2016 08:21 AM
Last Updated : 17 Sep 2016 08:21 AM

பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையின்போது கேபிஎன் பேருந்துகளை எரித்த வழக்கில் 7 பேர் கைது: பெண் உட்பட 10 பேருக்கு வலைவீச்சு

பெங்களூருவில் தமிழகத்தின் கேபிஎன் நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்ட வழக்கில் 7 பேரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு பெண் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ கத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டதை எதிர்த்து, கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கடந்த 12-ம் தேதி வன்முறையில் ஈடுபட் டனர்.

பெங்களூருவில் மைசூரு சாலையில் உள்ள டிசவுசா நகரில், கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தமான 42 பேருந் துகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. இந்தப் பேருந்துகளுக்கு கன்னட அமைப்பினர் தீ வைத்ததில் 42 பேருந்துகளும் எரிந்து நாசமாயின. கேபிஎன் நிறுவன பேருந்துகள் உட்பட பெங்களூருவில் 200-க்கும் மேற் பட்ட தமிழக வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

தீவைப்பு சம்பவம் தொடர்பாக கேபிஎன் நிறுவன ஊழியர் வெங்கடாசலம் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கேபிஎன் நிறுவன ஊழியர்கள் எடுத்த வீடியோ மற்றும் ஊடகங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் டிசவுசா நகரை சேர்ந்த ரக் ஷித் (19), சந்தன் (19), சதீஷ் (27), லோகேஷ் (25), கிரண் கவுடா (27), கெம்பேகவுடா (28), பிரகாஷ் (46) ஆகிய 7 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 147 (கலவரம் செய்தல்), 427 (சேதம் விளைவித்தல்), 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்), 435 (தீ வைத்து எரித்து பெரிய இழப்பு ஏற்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதான 7 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வன்முறையை நேரில் பார்த்தவர்கள் அளித்த சாட்சியம் மூலம், இதில் ஒரு பெண் உட்பட மேலும் 10 பேர் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள 10 பேரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அப்பாவிகள் கைது?

இதனிடையே பெங்களூருவில் 12-ம் தேதி நடந்த வன்முறை தொடர் பாக, இதுவரை 400-க்கும் மேற்பட் டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் அப்பாவிகள் பலரை போலீ ஸார் கைது செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பாலா னோர் கூலித் தொழிலா ளர்கள், சுமை தூக்கும் தொழி லாளர்கள், ஓட்டுநர்கள் எனத் தெரியவந்துள் ளது.10-க்கும் மேற் பட்டோர் பெங்களூருவில் வாழும் தமிழர்கள் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் கைதானவர்களின் குடும்பத்தினர், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் “போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை கைது செய்யாமல் அப்பாவிகளை கைது செய்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் எங்கள் குடும்பத்தினருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனவே அவர்களை விடுவிக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x