

ஆந்திர மாநில முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர், சமாஜ்வாதி கட்சியில் சேர இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரோஹித் சேகரின் தாயும், தனது இரண்டாவது மனைவியுமான உஜ்வாலா சர்மாவுடன் என்.டி.திவாரி, உபி முதல்வர் அகிலேஷ் சிங் யாதவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “உபி மற்றும் உத்தராகண்ட் மாநில மக்கள் மத்தியில் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் திவாரி, தனது மகன் ரோஹித் சேகரை அரசியல் வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார். இதில் சேகருக்கு அரசியல் ஆசானாக இருந்து வழி காட்டும்படி அகிலேஷிடம் திவாரி தம்பதி கேட்டுக் கொண்டுள்ளது. எனவே சேகர் விரைவில் எங்கள் கட்சியில் சேர உள்ளார்” என உறுதியுடன் தெரிவித்தனர்.
கடந்த 2008-ல் ஆந்திர ஆளுநராக இருந்த என்.டி. திவாரியை தனது தந்தையாக அதிகாரப்பூர்வமாக அறி விக்கக் கோரி 34 வயது ரோஹித் சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ரோஹித் தனது மகன் இல்லை என திவாரி மறுத்து வந்த போதிலும், மரபணு சோதனையில் இது உறுதியானது.
இதையடுத்து, கடந்த ஜூலை 27, 2012-ல் இருவருக்கும் இடையே சமாதானம் செய்யப்பட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டது.