சிறையில் சசிகலாவுக்கு டிவி, கட்டில், மின்விசிறி: சுதாகரனுக்கு வசதிகள் வழங்க மறுப்பு

சிறையில் சசிகலாவுக்கு டிவி, கட்டில், மின்விசிறி: சுதாகரனுக்கு வசதிகள் வழங்க மறுப்பு
Updated on
1 min read

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை யடுத்து மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர்.

அப்போது சசிகலா தரப்பில் முதல் வகுப்பு அறை, இதர வசதிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நீதிபதி அஸ்வத் நாராயணா ஏற்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து கடந்த 16-ம் தேதி சசிகலாவின் வழக்கறிஞர்கள், கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் “சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரும் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமான வரி செலுத்துகின்றனர். எனவே இருவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, முதல் வகுப்புக்கு உரிய வசதிகளை வழங்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைப் பரிசீலித்த டிஜிபி சத்திய நாராயண ராவ், பரப்பன அக்ரஹாராவில் மகளிர் பிளாக்கில் 2-வது அறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசிக்கு டிவி, கட்டில், மெத்தை, மின் விசிறி, நாற்காலி, மேஜை, 2 செய்தித் தாள்கள் (தமிழ், ஆங்கிலம்) ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்தார். அதே வேளையில் வீட்டு சாப்பாடு, வெளியில் இருந்து மருந்து ஆகிய கோரிக் கைகள் பாதுகாப்பு காரணங் களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆண்கள் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் தனக்கு எந்த வசதியும் வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே அவருக்கு புதிய சலுகையோ, வசதியோ செய்து தரப்படவில்லை. ஏற்கெனவே மூவருக்கும் தலா 2 தட்டுகள், 2 சொம்புகள், தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை, சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

சயனைடு மல்லிகா சிறை மாற்றம்

இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து பரப்பன சிறையில் அடைக்கப்பட்டிருந்த சயனைடு மல்லிகா பெல்காம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 6-க்கும் மேற்பட்டோரை சயனைடு கொடுத்து கொன்ற இவரால் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஊடகங்களில் செய்தி வெளியானது.

எனவே சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சயனைடு மல்லிகா நேற்று பெல்காம் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in