

போலி பாஸ்போர்ட் வழக்கில் நிழல்உலக தாதா அபு சலீமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001-ம் ஆண்டில் ஹைதராபாத் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் ரமீல் கமீல் மாலிக் என்ற பெயரில் போலியான ஆவணங்களை அளித்து அபு சலீம் பாஸ்போர்ட் பெற்றார். மனைவி சமீரா, காதலி மோனிகா பேடி, தனக்கு என மொத்தம் 3 பாஸ்போர்ட்டுகளை அவர் பெற்றார். இதுதொடர்பாக ஆந்திர போலீஸார் விசாரித்து வந்தனர். 2002-ல் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 2004-ல் அபு சலீம் உள்பட 10 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் போர்ச்சுகலில் பதுங்கியிருந்த அபு சலீமும் அவரது காதலி மோனிகாபேடியும் 2005-ல் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
இதை தொடர்ந்து ஹைதராபாதில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2009 முதல் அபு சலீம் மீது தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி எம்.வி. ரமணா நாயுடு கடந்த 18-ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
அப்போது அபு சலீம் மீதான குற்றம் நிரூபணமாகியிருப்பதால் அவரை குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம் நவம்பர் 28-ம்
தேதி வெளியிடப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி வியாழக்கிழமை தீர்ப்பு விவரத்தை வெளியிட்ட நீதிபதி, குற்றவாளி அபு சலீமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அபு சலீம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வழக்குக்காக ஹைதராபாத் அழைத்து வரப்பட்ட அபு சலீம், பின்னர் மும்பை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.