

பாந்த்ரா-டேராடூன் விரைவு ரயிலில் 3 பெட்டிகள் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் தீயில் கருகி பலியாயினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பாந்த்ராவிலிருந்து டேராடூனுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புறப்பட்ட இந்த ரயில், மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் கோல்வாட் மற்றும் தஹனு சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை 2.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி தீப் பிடித்து எரிந்ததாகவும் பின்னர் மற்ற 2 பெட்டிகளுக்கு தீ பரவியதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த பயணிகள் சிலர் தீப்பிடித்த பெட்டியிலிருந்து தப்பிச் சென்றதாக ஒரு பயணி தெரிவித்தார்.
4 பேரின் அடையாளம் தெரியவில்லை
இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் 4 ஆண்களின் சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஷரத் சந்திரா புதன்கிழமை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "தஹானு ரயில் நிலையத்தைக் கடந்த பிறகு ரயிலின் பின்பக்கம் உள்ள ஒரு பெட்டியிலிருந்து புகை வந்ததைப் பார்த்த கேட்கீப்பர், ரயிலில் இருந்த பாதுகாவலருக்கு (கார்டு) தகவல் கொடுத்துள்ளார். அவர் உடனடியாக ஓட்டுநருக்கு தகவல் கொடுத்ததும் கோல்வாட் ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டது. கேட்கீப்பர் தகவல் கொடுத்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு சேதமடைந்த பெட்டிகளை விடுத்து மற்ற பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டுச் சென்றது" என்றார்.
ரூ.5 லட்சம் நிவாரணம் :
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன் இறந்தவர்களின் வாரிசுக்கு கருணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் என ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் கூறியுள்ளார்.
மேலும் பலத்த காயமடைந் தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசாக காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொள்வார் என்றும் குமார் கூறியுள்ளார்.
தொடரும் விபத்து :
ரயில்களில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ள போதிலும், விபத்துகள் தொடர்கதையாக உள்ளன.
கடந்த டிசம்பர் 28-ம் தேதி பெங்களூர்-நந்தெட் விரைவு ரயில் தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்தனர். 2012-13 ஆண்டில் நடந்த 9 தீ விபத்துகளில் 56 பேர் இறந்துள்ளனர்.-