

சர்வதேச யோகா தினமான ஜூன் 21-ம் தேதி, இந்தியா மட்டுமன்றி உலகின் 100 நாடுகளில் யோகா தின கொண்டாட்டங்களை வாழும் கலை அமைப்பு நடத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது. அதன்படி, முதல் சர்வதேச யோகா தினம் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்று யோகா, தியானம் ஆகியவற்றை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 2-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் எல்லா மாநிலங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாழும் கலை அமைப்பு சார்பில் இந்தியா மட்டுமன்றி உலகின் 100 நாடுகளில் யோகா தின விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் யோகா தின விழாவை தொடங்கி வைக்க உள் ளார். தவிர வாஷிங்டன், போஸ்டன், கொலம்பஸ், மின்னசோட்டா, சான் பிரான்சிஸ்கோ, போர்ட்லேண்ட், சியாட்டில் உட்பட பலவேறு நகரங்களில் சுதர்ஷன் கிரியா, யோகா, தியான நிகழ்ச்சிகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைக்கிறார்.
இதற்கிடையில் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா தின நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் 4 இடங்களில் நடக்கும் நிகழ்ச்சி களில் 16,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
‘‘உடல், மனம், சிந்தனைகளை யோகா ஒருங்கிணைக்கிறது’’ என்று வாழும் கலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறி யுள்ளது.